தற்போதைய செய்திகள்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் – பா.ஜனதா கூட்டணியில் இருந்து,தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்…..

புதுடெல்லி,

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் கடும் அதிருப்தியடைந்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் வெளியேறியது. மத்திய அரசுக்கு எதிராக, அந்தக் கட்சியின் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

சிறப்பு அந்தஸ்து

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது, சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதித்தொகுப்பு தரப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

பாஜக அரசு தாக்கல் செய்த கடைசி பட்ஜெட்டிலும் நிதித்தொகுப்பு அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் தெலுங்குதேசம் கட்சிக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

2 அமைச்சர்கள் ராஜினாமா

இந்த கோரிக்கையை முன் வைத்து, நாடாளுமன்றத்தில் கடந்த 10 நாட்களாக தெலுங்குதேசம் கட்சியினால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

கூட்டணியில் இருந்தும் விலகல்

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி.க்கள், எம்எல்ஏக்களுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் நேற்று விலகியது.

தெலுங்குதேசம் கட்சியின் உயர்மட்ட அரசியல் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் நலனை காப்பதற்காகவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி இருப்பதாக, நேற்று சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்து இருந்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்குதேசம் கட்சி, மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றை அளித்தது.

இதேபோல், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

நிராகரிப்பு

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. இதனால், அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, முறையாக அவை நடக்காத நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம்கோரும் மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்.

திங்கட் கிழமை

இன்றும் (சனி), நாளையும் விடுமுறை என்பதால், நாடாளுமன்றம் திங்கட் கிழமை கூடுகிறது. அன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸ் குறித்து மீண்டும் வலியுறுத்தப்படும் என, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ரமேஷ், தோட்டா நரசிம்மன், ரவீந்த பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. நிலை

தெலுங்குதேசம் கட்சிக்கு மக்களவையில் 16 எம்.பி.க்களும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 9 உறுப்பினரகள் உள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது ஆந்திர கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், யாருக்கு ஆதரவு என்பதை அ.தி.மு.க முடிவு செய்யும் என்று, மக்களவை உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்தார்.

ஆதரிக்க வாய்ப்பு

அ.தி.மு.க வுக்கு மக்களவையில் 37 உறுப்பினர்கள் உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதிக்கும் மத்திய அரசு மீது அ.தி.மு.க உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன.

இதனால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வாய்ப்பு இருப்பதாக தெலுங்கு தேசமும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் நம்புகிறது.

எதிர்க்கட்சிகள் பலம்

மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 48 உறுப்பினர்கள் உள்ளனர். திரிணாமுல் காங்கிரசுக்கு 33 உறுப்பினர்களும், பிஜு ஜனதா தளத்திற்கு 20 உறுப்பினர்களும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 உறுப்பினர்களும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு 11 உறுப்பினர்களும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 9 உறுப்பினர்களும் உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியில் 9 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 உறுப்பினர்களும், உள்ளனர். இவர்கள் தவிர சமாஜ்வாதி கட்சிக்கு 5 உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர். எனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முன்மொழிவதற்கு போதுமான எம்.பி.க்களின் கையெழுத்தை பெறுவதில் தெலுங்குதேசம் கட்சிக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.

ஆட்சிக்கு ஆபத்து இல்லை

தற்போதைய நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 274 ஆகும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 18 உறுப்பினர்களும், லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்களும், சிரோமணி அகாலிதளத்திற்கு 4 உறுப்பினர்களும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கு 3 உறுப்பினர்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 உறுப்பினர்களும், இந்திய தேசிய லோத் தளம் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், அப்னா தள் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். தலா ஒரு உறுப்பினரைக் கொண்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி. பாட்டாளி மக்கள் கட்சி, அகில இந்திய இந்திய என்.ஆர். காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகியனவும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், திங்கட் கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், மக்களவையில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் பா.ஜனதா கூட்டணிக்கு தேவையான பெரும்பான்மை பலம் இருப்பதால், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply