தற்போதைய செய்திகள்

ஆட்சியை கவிழ்க்கும் தி.மு.க கனவு பலிக்காது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

கோவை,
அ.தி.மு.க. ஆட்சியை கலைத்துவிடலாம் என்ற தி.மு.க.வின் கனவு பலிக்காது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூரில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 86 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமி பங்கேற்று திருமணங்களை நடத்தி பேசியதாவது:
திருமணம்
இன்றைக்கு இந்தத் திருமணம், ஜெயலலிதா இருக்கின்ற காலத்திலே அவர்கள், என்னுடைய பிறந்தநாள் வருகின்றபொழுது, ஏழை, எளியோருக்கு நீங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக இருக்கவேண்டும், ஏழை, எளியோர்களுக்கு நீங்கள் இலவசமாக திருமணத்தை நடத்துகின்ற விழாவாக இருக்க வேண்டும் எங்களுக்கெல்லாம் கட்டளையிட்டார்.
அவருடைய கட்டளையின்படி அவர் இருக்கின்ற காலத்திலேயிருந்து அவர் மறைந்தாலும், அதை நாங்கள் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு மேடையிலே இந்து முறைப்படி இந்து மதத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றிருக்கின்றது. இஸ்லாமிய முறைப்படி இஸ்லாமிய மணமக்களுக்கு நடைபெற்றிருக்கின்றது. கிறிஸ்துவ மரபுப்படி அந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றிருக்கின்றது.
ஆகவே, அந்தந்த மதத்தைச் சார்ந்த சடங்குப்படி இங்கே திருமணம் நடைபெற்றிருக்கின்றது. ஆகவே, தமிழகத்திலே அ.தி.மு.க. அரசு மதச்சார்பற்ற அரசு என்பதற்கு இந்த திருமணமே சான்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாராரோ மதத்தைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால், தமிழகத்திலே மதச்சார்பற்ற ஆட்சி செய்கின்ற ஒரே அரசு அ.தி.மு.க. அரசு என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர். இருந்த காலத்திலும் சரி, ஜெயலலிதா இருந்த காலத்திலும் சரி, தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டது. ஆகவே, இந்த மதம், அந்த மதம் என்றெல்லாம் இங்கே கிடையாது, அனைவரும் சமம். ஆகவே, அப்படிப்பட்ட இன்றைக்கு மதச்சார்பற்ற ஒரு மாநிலமாக தமிழகம் இன்றைக்கு இருபெரும் தலைவர்கள் வகுத்த பாதையிலே சென்று கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்
மதச்சார்பற்ற
இன்றைக்கு மதச்சார்பற்ற மாநிலமாக தமிழகம் இருபெரும் தலைவர்கள் வகுத்த பாதையிலே சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். ஜெயலலிதா இன்றைக்கு ஏழை எளியோர் திருமணம் நடந்தால் மட்டும் போதாது, அந்த திருமணத்திற்கு தாலிக்குத் தங்கம், இந்திய வரலாற்றிலேயே எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது.
தமிழகத்திலேதான் திருமண வயதை அடைகின்றபொழுது, குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக திருமணம் தடைபடுகின்றது. ஆகவே, அப்படிப்பட்ட ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமனம் செய்யமுடியாத சூழ்நிலை. அதை அறிந்து ஜெயலலிதா முதலிலே 4 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கினார்கள், அதை 8 கிராமாக உயர்த்திக் கொடுத்தார். ரூபாய் 25 ஆயிரம், ரூபாய் 50 ஆயிரம், அதையும் ஜெயலலிதா தந்தார்கள் படித்த பெண்களுக்கு.
இன்றைக்கு ஜெயலலிதா ஆட்சியிலே, ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் உரிய நேரத்திலே திருமணம் செய்யக்கூடிய சூழ்நிலையை அம்மாவினுடைய ஆட்சியிலே தான் துவக்கப்பட்டு அது இன்றைக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
நிதியுதவி
அதுமட்டுமல்ல, இன்றைக்கு மகப்பேறு நிதியுதவி, கடந்த காலத்தில் 6000 ரூபாயிலிருந்து 12000 ரூபாயாக ஜெயலலிதா அதை உயர்த்தினார். ஜெயலலிதா 2016 சட்டமன்றத் தேர்தலிலே, அ.தி.மு.கவின் வாக்குறுதியாக அளித்தார்கள், நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அதை உயர்த்தி வழங்குவேன் என்று சொன்னார்.
இன்றைக்கு 18000 ஆக உயர்த்தி 14000 ரூபாய் ரொக்கமாகவும், 4000 ரூபாய் இரண்டு கட்டங்களாகவும், கிட்டத்திட்ட 12வது வாரம், 14வது வாரம் அந்த இரண்டு பகுதியிலே இரண்டாகப் பிரித்து, கர்ப்பிணிப் பெண்கள் அந்த குழந்தை நல்ல எடையுடன் பிறக்க வேண்டும் என்பதற்காக சத்துணவு கொடுக்கின்ற அந்த சத்தான பொருளை, இன்றைக்கு ஜெயலலிதா அரசு வழங்கியிருக்கின்றது.
பெட்டகம்
அதற்கு தாய்சேய் நலப் பெட்டகம் என்ற பெயர் சூட்டப்பட்டு, அதையும் அம்மாவினுடைய அரசு நடைமுறைப்படுத்தியிருக்கின்றது. அதுமட்டுமல்ல, இன்றைக்கு குழந்தை இந்த மண்ணிலே பிறந்தவுடன் நலத்திட்ட உதவிகளை பெறுகின்றது அம்மாவினுடைய அரசில் தான், வேறு எந்த அரசாங்கத்திலும் கிடையாது.
ஆகவே, ஜெயலலிதா ஏழை, எளிய தாய்மார்கள் பெற்றெடுத்த குழந்தைகள்கூட சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதற்காக 16 வகையான அம்மா பரிசுப் பெட்டகத்தைக் கொடுத்து அந்த குழந்தையை பாதுகாத்த தெய்வம் ஜெயலலிதா. அதேபோல, கர்ப்பிணிப் பெண்கள் அவர்கள் பிரசவம் பெற்ற பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலமாக வீட்டிற்கே அவர்களை அழைத்துச் சென்று சேர்க்கக்கூடிய சூழ்நிலையும் இன்றைக்கு ஜெயலலிதாவின் அரசு ஏற்பாடு செய்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
50 சதவீதம்
ஆகவே, பெண்களுக்கென்று பல்வேறு திட்டங்களை ஜெயலலிதாவின் அரசு வகுத்துத் தந்திருக்கின்றது, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை பெண்களுக்கு பெற்றுத்தருவதற்கு உரிய சட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே, இன்றைக்கு பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசாக அம்மாவினுடைய அரசு திகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.
அதுமட்டுமல்ல, இங்கே பேசுகின்றபொழுது உள்ளாட்சித்துறை அமைச்சர், கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பணிகளை சுட்டிக்காட்டினார். இன்றைக்கு கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் எல்லா துறைகளிலுமே ஜெயலலிதாவின் ஆட்சிதயில் இன்று உயர்ந்திருக்கின்றது, அதையே ஜெயலலிதாவின் அரசு பின்பற்றிக் கொண்டிருக்கிறது. எந்த வகையிலும் இன்றைக்கு, எல்லா துறைகளிலும் வளம் காண்கின்ற ஒரு நிலையை நாம் பார்க்கின்றோம்.
கனவு பலிக்காது
இன்றைக்கு எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மாநாட்டில் பேசினார், சொடக்கு போட்டால் இந்த ஆட்சி இருக்காது என்று சொன்னார். கடப்பாறையை போட்டு நெம்பினால்கூட இந்த ஆட்சியை அசைக்க முடியாது. நீங்கள் ஏற்கனவே இந்த ஆட்சியை அகற்றுவதற்கு எடுத்த அத்தனை முயற்சிகளும் வலுவிழந்து போய்விட்டது. வரலாறு காணாத அளவிற்கு சட்டமன்றத்திலே அமளியை ஏற்படுத்தினார், ரசளை செய்தார்கள், அப்பொழுதுகூட, நாங்கள் தாக்குபிடித்து அதையும் முறியடித்து, ஜெயலிதாவின் ஆட்சியை காப்பாற்றி இன்றைக்கு சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு தந்து கொண்டிருக்கின்றோம்.
உங்களுடைய கனவெல்லாம் பகல் கனவாகத்தான் இருக்கும், கானல் நீராகத்தான் இருக்குமேயொழிய, நிச்சயம் ஒருபோதும் உங்களுடைய எண்ணம் நிறைவேறாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க.
இன்றைக்கு அ.தி.மு.க.வின் தொண்டர்கள் ஒன்றரைகோடி பேர் இருக்கின்றார்கள், ஒன்றரை கோடி சிப்பாய்கள் இந்த இயக்கத்திற்கும், ஆட்சிக்கும் பக்கபலமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். அ.தி.மு.க. அரசை கலைத்து விடலாம் என்று கனவில்கூட நீங்கள் நினைக்கக்கூடாது, நினைத்தாலும் பலிக்காது.
இன்றைக்கு காவிரி மேலாண்மை வாரியத்தைப் பற்றி பேசுகின்றார். 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மத்தியிலும் இவர்கள் ஆட்சியிலே அமர்ந்தார்கள் 1999-லே, இங்கே தமிழகத்திலும் ஆட்சியில் செய்தார்கள். கிட்டத்தட்ட 14 ஆண்டுகாலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்திலே தி.மு.க. இணைந்து இருந்தது, தமிழகத்திலும் அவர்களுடைய ஆட்சி, மத்தியிலும் அவர்களுடைய ஆட்சி. பாரதீய ஜனதாவிலும் அங்கம் வகித்தார்கள், காங்கிரஸிலும் அங்கம் வகித்தார்கள்.
காவிரி மேலாண்மை….
இந்த காவிரி மேலாண்மை அமைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்தார்களா? எதுவும் செய்யவில்லை, துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. எம்.ஜி.ஆர். அப்பொழுதே மத்திய அரசிற்கு கடிதம் எழுதப்பட்டு, அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி இன்றைக்கு நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை நாம் பெற்றோம். அந்த நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பைக்கூட அரசிதழில் வெளியிட முடியாத ஒரு மோசமான சூழ்நிலையை அவர்களுடைய ஆட்சியிலே பார்க்க முடிந்தது. மத்தியிலும் ஆட்சி, மாநிலத்திலும் ஆட்சி, 2007-ல் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வந்தது, அப்பொழுதே மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தபொழுது, எளிதாக பெற்றிருக்கலாம், காவிரி மேலாண்மை வாரியத்தையும் அமைத்திருக்கலாம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்திருக்கலாம், இன்றைக்கு இவ்வளவு பிரச்சினைக்கு இடமில்லாமல் போக்கியிருக்கலாம், அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
அவர்களெல்லாம் அதை நினைக்கவில்லை, தமிழ்நாட்டு மக்களை சிந்திக்கவில்லை. இன்றைக்கு காவிரி பாசனம் பெறுகின்ற டெல்டா பாசன விவசாயிகளுடைய எண்ணம் அவர்களுக்கு வரவில்லை, அவர்களுடைய எண்ணமெல்லாம் அதிகாரம், மத்தியிலும் அதிகாரத்தில் இருக்க வேண்டும், மாநிலத்திலும் அதிகாரம் இருக்க வேண்டும், மாநிலத்திலும் அவர்கள் முதலமைச்சராக இருக்க வேண்டும், துணை முதலமைச்சராக இருக்க வேண்டும், மத்தியிலும் அமைச்சராக இருக்க வேண்டும், அதிகாரத்தைப் பெறுவதில்தான் குறிக்கோளாக இருந்தார்களேயொழிய, நாட்டுமக்களுடைய நன்மையோ, நாட்டுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மை மத்தியிலிருந்து பெற்றுத் தருவதற்கு ஒருபோதும் அவர்கள் மேற்கொண்டதே கிடையாது.

ஆகவே, இவ்வளவு பாதிப்புக்குள்ளாவதற்குக் காரணம் தி.மு.க.தான். ஜெயலலிதா இருக்கின்ற காலத்திலேதான் சட்டப் போராட்டம் நடத்தி சட்டத்தின் வாயிலாக அரசிதழில் வெளியிட்டார். ஆகவே, நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீர் முறைப்படி கிடைப்பதற்காக நீதிமன்றம் சென்று, சட்டத்தின் வாயிலாக உரிமையை பெற்றுத்தந்த ஜெயலலிதா.

இன்றைக்குக்கூட, உச்சநீதிமன்றம் ஆறு வாரகாலத்திற்குள் காவிரி நடுவர்மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும், தீர்ப்பிலே அழகாக குறிப்பிட்டுள்ளார்கள். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு, இரண்டையும் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில், ஆறு வாரகாலத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் மத்திய அரசு கெடு வைத்திருக்கின்றார்கள், ஆகவே, இன்னும் 29 -ம் தேதி வரை தான் இருக்கின்றது, அதற்குள் மத்திய அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம், இல்லாவிட்டால் அடுத்த நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம்.

ஆகவே, இன்றைக்கு அ.தி.மு.க.அரசைப் பொறுத்தவரைக்கும், நாட்டுமக்கள் தான் முக்கியம், தமிழ்நாட்டு மக்கள் தான் முக்கியம், தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பெறுவதற்கு அ.தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். ஆகவே இவர்களைப்போல ஆட்சி அதிகாரத்திலே இருக்கின்றபொழுது, அதை நழுவவிட்டு விட்டார்கள், அப்பொழுதே எளிதாக சென்று அதை செய்திருக்கலாம், அந்த வாய்ப்பு அவர்களிடத்திலே கிடைத்தது, அந்த வாய்ப்பை நழுவவிட்டார்கள் தி.மு.க, அதை செய்யாத துரோகம் விளைவித்தவர் தி.மு.க. என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

இன்றைக்கு ஜெயலலிதாவின் அரசு இன்றைக்கு கல்வியிலே மிகப் பெரிய புரட்சியை செய்திருக்கிறது, அதிக நிதி ஒதுக்கீடு கல்விக்குத்தான் தந்திருக்கிறது. ஒரு நாட்டிலே பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டுமென்று சொன்னால், கல்வி சிறக்க வேண்டும், நாடு வளமாக இருக்க வேண்டுமென்று சொன்னால் கல்வி சிறக்க வேண்டும், ஒரு நாடு அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டுமென்று சொன்னால், அந்த நாடு கல்வியிலே சிறக்க வேண்டும். அனைத்து சிறக்க வேண்டுமென்று சொன்னால், கல்வி சிறக்க வேண்டும்.

ஆகவே, அப்படிப்பட்ட கல்வியை தமிழகத்திலே வழங்குவதற்கு ஜெயலலிதா கல்வியிலே ஒரு புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அதே வழியை பின்பற்றிய அம்மாவினுடைய அரசும் இன்றைக்கு கல்விக்கு முக்கிய முன்னுரிமை கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

இன்றைக்கு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட படிக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கித் தந்திருக்கிறது. கல்விக்கு ஏராளமான உதவிகளை ஜெயலலிதாவின் அரசு வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றது. பள்ளியிலே படிக்கின்ற குழந்தைகளுக்கு காலணி, சீருடை, விலையில்லா புத்தகம், பள்ளிக்குச் செல்வதற்கு சைக்கிள், விஞ்ஞானக் கல்வி கொடுப்பதற்கு மடிக்கணினி அத்தனையும் கொடுத்த அரசு ஜெயலலிதாவின் அரசு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தரமான கல்வி கொடுப்பதற்கு மடிக்கணினி என அனைத்தையும் கொடுத்த அரசு ஜெயலலிதாவின் அரசு. தி.மு.க. ஆட்சியில் 21 சதவீதம் இருந்தது. 2011-ல் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி மலர்ந்தபிறகு, ஜெயலலிதா கல்வியில் எடுத்த நடவடிக்கை, கல்விக்கு ஒதுக்கிய நிதி, கல்விக்கு செய்த உதவியின் மூலமாக காரணமாக 46.9 சதவீதமாக உயர்ந்து, அதிகமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை தமிழகத்தில் துவக்கி, ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்கள்கூட குறைந்த கட்டணத்தில், உயர்கல்வி பெறக்கூடிய காரணத்தால், அகில இந்திய அளவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது.

அதிகளவில் பொறியில் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி.கல்லூரி என அரசின் சார்பாக அத்தனை கல்லூரிகளையும் தொடங்கிய அரசு அம்மாவினுடைய அரசு என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

இங்கே காலையிலே 8 மணியிலிருந்து கிட்டத்தட்ட 4 மணிநேரம், 86 ஜோடி மணமக்களுக்கு வாழ்த்து சொல்லுகின்றவிதமாக அமர்ந்திருக்கின்றீர்கள்.

ஆகவே, அத்தனைபேருடைய வாழ்த்துக்களோடு, என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து மணமக்கள், ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து இல்லற வாழ்க்கை மேற்கொண்டால்தான், இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும். இன்றைக்கு அந்த காலம் போலல்லாமல், விஞ்ஞான உலகமாக இருப்பதால், மணமக்கள் இன்றைய சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமென இந்த நேரத்திலே தெரிவித்து, சாலையென்று சொன்னால் மேடு, பள்ளம் இருக்கும், அதுபோல வாழ்க்கையென்று சொன்னால் இன்பம், துன்பம் கலந்துதான் வரும். எனவே அந்த இரண்டையும் பொறுத்து, வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Leave a Reply