BREAKING NEWS

ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக சமீபத்தில் மத்திய அரசு பிரித்தது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், அரியானா மாநிலத்தில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “பாகிஸ்தானுடன் இனிமேல், பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விஷயமாக மட்டுமே இருக்கும். தீவிரவாதத்துக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே, அதனுடன் பேச்சு நடத்தப்படும்.

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது பாகிஸ்தானை பலவீனப்படுத்தி விட்டது. இது அவர்களுக்கு கவலை அளிக்கிறது. தற்போது, பாகிஸ்தான் ஒவ்வொரு நாடாக சென்று உதவி கேட்கிறது. தீவிரவாதம் மூலம் இந்தியாவை நிலைகுலைய செய்ய பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், 56 அங்குல மார்பு கொண்ட நமது பிரதமர், முடிவுகள் எப்படி எடுக்க வேண்டும் என்பதை நாட்டுக்கு காட்டியுள்ளார்” என்றார்.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தபால் தலையை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் பாகிஸ்தானுடன் அதன் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் குறித்து மட்டுமே பேசப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.




Leave a Reply