BREAKING NEWS

அ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இளம்பெண் பலி

சென்னை, பள்ளிக்கரணையில் நேற்று சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற சுப என்ற இளம்பெண் மீது விழுந்தது. இதனால், நிலைதடுமாறிய சுப எதிரே வந்த தண்ணீர் லாரி மீது மோதினார். இதனால், சம்பவ இடத்திலே சுப பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. சாய்ந்து விழுந்த பேனர் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் இல்ல விழாவிற்கு வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களுக்கு இடையூறு

அ.தி.மு.க. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகத் தொண்டாற்றுவதற்காகவே தோன்றிய மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் மனம் அறிந்து, தேவையை உணர்ந்து மக்களுக்காகப் பணியாற்றுவது தான் அ.தி.மு.க. உடன்பிறப்புகளின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். இந்தக் கருத்தினை கட்டளையாகவும், வேண்டுகோளாகவும் பல நேரங்களில் ஜெயலலிதா நினைவூட்டி இருக்கிறார். ஜெயலலிதா வழியில் அரசியல் பணியாற்றி வரும் நாங்களும் இந்த வேண்டுகோளை பலமுறை எடுத்துக் கூறியுள்ளோம்.

பேனர் கூடாது

அ.தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கோ, கழகத்தினர் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற முறையிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை நிறுத்திவிட வேண்டும்.

மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் கழகத்தினர் ஈடுபடவே கூடாது. ஒருசிலர் ஆர்வம் மிகுதியாலும், விளைவுகளை அறியாமலும், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்கின்ற சில செயல்களால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற செய்தியால், நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.

எனவே, எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட்டுகள், பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.




Leave a Reply