BREAKING NEWS

அ.தி.மு.க-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா?

வேலூர் தொகுதி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ள வாக்குகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்துமாறு நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டுக்காக பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா சென்னை வந்தார்.

கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கி இருந்த அமித்ஷா தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மாநில தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், பொதுச்செயலாளர்கள் வானதி ஸ்ரீனிவாசன், நரேந்திரன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேர்தல் முடிவுகள் குறித்து விவாதம்
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து மிகவும் கவனமுடன் கேட்டார். குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் உணர்வுகள், தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக இருக்கும் சவால்கள் பற்றி விளக்கமாக கேட்டறிந்தார்.

குறிப்பாக வேலூர் தொகுதி தேர்தல் முடிவு பற்றி அதிகமாக விவாதித்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் வென்றது. பெரும்பாலான தொகுதிகளில் 3 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இப்போது வேலூர் தொகுதியில் தி.மு.க. போராடிதான் வெற்றி பெற்றுள்ளது.

ஆய்வு நடத்த உத்தரவு

முக்கியமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் ஓட்டுகள் தி.மு.க.வுக்குத்தான் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணிக்கு 4 லட்சத்துக்கு மேல் வாக்குகள் கிடைத்து இருக்கிறதே, இது புதிய வாக்கு வங்கி உருவாகி இருப்பதை காட்டுகிறதா? என்று அமித்ஷா கேட்டுள்ளார்.

மக்களின் இந்த மன மாற்றத்துக்கு காரணம் என்ன? முத்தலாக், காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் மனநிலை என்ன? அது தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது பற்றி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகள், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு கிடைத்துள்ளன என்பது பற்றி விரிவாக ஆய்வு நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.




Leave a Reply