தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் ‘நீட்’ தேர்வு கையேடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வெளியிட்டனர்….

சென்னை,
‘நீட்’ போட்டி தேர்வை எதிர்கொள்ள வசதியாக அ.தி.மு.க. சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நீட் போட்டி கையேட்டை நேற்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.
நீட் தேர்வு
அ.தி.மு.க.வின் ‘அம்மா கல்வியகம்’ சார்பில் இந்த நீட் போட்டி தேர்வை எதிர்கொள்ள வசதியாக நீட் தேர்வு கையேடு தயாரிக்கப்பட்டு உள்ளது, இந்த கையேடுகளை அஸ்பயர் சாமிநாதன் தயாரித்து உள்ளார். மொத்தம் 250 பக்கங்கள் கொண்ட இந்த கையேட்டின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையேட்டை வெளியிட்டனர். மேலும் இணையத்தில் இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதையும் தொடங்கி வைத்தனர். மாணவர்களுக்கு இந்த கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது.
முதல்-அமைச்சர்
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, ‘அம்மா கல்வியகம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த கையேடு அறிவுப்பூர்வமான, விஞ்ஞான பூர்வமான கல்வி பெற பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, ‘அம்மா கல்வியகம் துவக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்து 2-–ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி மிகவும் பயனுள்ள வகையில் இந்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, பொன்னையன், பா.வளர்மதி, நத்தம் விசுவநாதன், ஜே.சி.டி. பிரபாகர், ஆதிராஜாராம், மனோஜ் பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply