BREAKING NEWS

அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு நாங்கள் எதற்கும் அஞ்சப்போவதில்லை

நாங்கள் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்றும், அ.தி.மு.க. ஆட்சியை கவிழக்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

இதுதொடர்பாக, வேலூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மறந்து விடுங்கள்

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறபொழுது என்ன ஆட்டம் ஆடினீர்கள்? அமைச்சர்களின் மேஜையில் ஏறி நடனம் ஆடினீர்கள். சபாநாயகரின் இருக்கையில் உங்களுடைய உறுப்பினர் அமர்ந்து எவ்வளவு அராஜகம் நடத்தினார். அது ஒரு கருப்பு நாள். அவ்வாறெல்லாம் செய்துவிட்டு ஒன்றுமே செய்யாததுபோல் ஸ்டாலின் பேசுகின்றார். நாங்கள் நினைத்திருந்தால் இந்த ஆட்சியை கவிழ்த்திருப்போம் என்கிறார்.

சட்டமன்றத்திலிந்து வெளியில் வரும்பொழுது எப்படிப்பட்ட கோலத்தில் வந்தார். அப்படிப்பட்ட நிலைக்குத் தான் நீங்கள் வருவீர்கள். எங்கள் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்று எண்ணினால் நீங்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியில் வந்த காட்சிதான் நடக்கும். வேறு ஒன்றும் நடக்காது. அ.தி.மு.க. அரசை கவிழ்க்கலாம் என்ற எண்ணம் இருந்தால் மறந்து விடுங்கள். அது எந்தக் காலத்திலும் நடக்காது. ஆனால், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை பேசி, ஆசை வார்த்தை காட்டி, அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கின்றேன் என்று சொல்லி, அவர்களுடன் இணைந்து, அவர்களையும் வழக்கில் சேர்த்து வழக்கு போட்டீர்கள். இவ்வளவும் செய்து விட்டு நாங்கள் எதுவுமே செய்யவில்லை என்கிறார். இருக்கின்ற இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

ஸ்டாலின் நாடகம்

யார் தவறு செய்தாலும் உரிய தண்டனையை அனுபவித்தே தீருவார்கள். ஸ்டாலின் எத்தனையோ நாடகத்தை அரங்கேற்றிப் பார்த்தீர்கள். எதுவுமே நடக்கவில்லை. ஏதோ உங்கள் தயவில்தான் எங்கள் ஆட்சி நடப்பது போல் பேசுகிறீர்கள். உங்கள் தயவு எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அதைச் சந்திக்கக்கூடிய தில் உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க. அதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை.

ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று பேசுகிறார். சட்டம்-ஒழுங்கைப் பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை, தகுதி இருக்கிறது? ஜெயலலிதா இந்த நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அவரை பெண் என்றும் பாராமல், சட்டமன்றத்தில் நடந்த அலங்கோலமான காட்சி கண்முன் இருக்கிறது. அப்படிப்பட்ட செயலை அரங்கேற்றிய உங்களுக்கு சட்டம் ஒழுங்கை பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

சட்டம் ஒழுங்கு

ஒரு பெண்மணிக்கு, எதிர்க்கட்சித் தலைவருக்கு, ஒரு கட்சியின் தலைவருக்கு இந்த மாதிரி நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை இருக்கும். இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கக்கூடிய ஒரு அரசு அ.தி.மு.க. அரசு.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது என்று தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய குடியரசு துணைத் தலைவரிடம் அதற்கான விருதினை நான் வாங்கினேன். இந்தியா முழுவதும் சர்வே செய்த பொழுது, தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலுள்ள ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தான் முதல் காவல் நிலையம் என்ற தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஏழுபேர் விடுதலை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்யவில்லை என்கிறார். நாங்களா விடுதலை செய்யவில்லை? உடனே அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த ஏழுபேரை விடுதலை செய்யவேண்டுமென ஆளுநருக்கு அனுப்பி வைத்த அரசு அ.தி.மு.க. அரசு என்பதை மறுக்க முடியுமா?

கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில், அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு, நளினியை மட்டும் விடுதலை செய்யலாம். மற்றவர்களுக்கெல்லாம் தண்டனையை நிறைவேற்றலாம் என்று தீர்மானம் நிறைவேற்றிய கட்சி தி.மு.க. நீங்கள் எங்களைப் பற்றி பேசுகிறீர்களா? கொடுத்த வாக்குறுதி எதுவானாலும் அதிலிருந்து பின்வாங்கவே மாட்டோம்.

ஹைட்ரோகார்பன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வந்தது தி.மு.க. நாங்கள் அல்ல. தடுத்து நிறுத்தியது அ.தி.மு.க. அரசு. எனவே, விவசாயிகளைக் காக்கிற அரசு அ.தி.மு.க. ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையின் காரணமாக தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்தது.

ரமலான் நோன்பு கஞ்சிக்காக அரிசி வழங்கும் திட்டம் 2001ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை விலக்கிக் கொண்ட போதிலும், அம்மாவின் அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 6 கோடி மானியம் வழங்கி வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு அரண்

இதன்மூலம் சென்ற ஆண்டு 3769 நபர்களும் இந்த ஆண்டு 4387 நபர்களும் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். உலமாக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூ.1500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இசுலாமிய சமுதாயத்தைச் சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்காக வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை ரூ.10 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் இதர வகுப்பு நிறுவனங்களை பழுது பார்ப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் பாதுகாப்பாக அரணாக இருப்பது அம்மாவின் அரசு.

இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply