BREAKING NEWS

அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

 

 

 

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:-

மக்கள் எதிர்பார்ப்பு

இன்றைக்கு தமிழகத்தில் ஒரு ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி எப்போழுது அப்புறப்படுத்த இருக்கிறது. இந்த ஆட்சி எப்பொழுது போக போகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணங்களைவிட, இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்றுதான் இன்றைக்கு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதை நாடு நன்றாக உணர்ந்திருக்கிறது.

மாநில உரிமைகள்

மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகும் நிலைமை இருந்து வருகிறது. தமிழகத்தில் இரண்டு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி தலைமையில் ஒரு ஆட்சி. அதேபோல், மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு கவர்னர் தலைமையில் ஒரு ஆட்சி. இந்த இரண்டு ஆட்சிகள் மாநில உரிமைகளை பறிக்கின்ற அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது. மக்களைப் பற்றி இவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது என்று ஆளுங்கட்சியினர் விழா கொண்டாடுகிறார்கள். சட்டமன்றத்திலே ஆளுங்கட்சி உறுப்பினரிலிருந்து, அமைச்சர்கள் வரை முதல்வர் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் முடிவு இருக்கிறதா? அது முழுமை அடையவில்லை.

கர்நாடக முடிவு

கர்நாடக முதல்வர் குமாரசாமி, உச்சநீதிமன்றம் அளித்திருக்கக்கூடிய தீர்ப்பையும் மதிக்காமல், மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தாலும் அதையும் தடுக்கின்ற முயற்சியிலே நாங்கள் ஈடுபடப் போகிறோம், மேல்முறையீட்டிற்கு செல்லப் போகிறோம், நீதி கேட்டு நியாயம் கேட்டு இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தீர்மானம் போட்டு நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது.

கவலை இல்லை

இதுபற்றி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட நேரத்தில், அவர் சொல்லக்கூடிய பதில் எனக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை என்கிறார். முதலமைச்சரைப் பொறுத்தவரையில் எதற்கும் கவலைப்படுவது கிடையாது. நீட் பிரச்சனையா? விவசாயிகள் பிரச்சனையா? காவிரி பிரச்சனையா?

சென்னை-சேலம் 8 வழிச் சாலை அமைக்கப்படுகிற காரணத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களா? தூத்துக்குடியிலே கோர சம்பவம் நடைபெற்றதே? எதைப் பற்றியும் கவலை இல்லை. அவர்கள் கவலைபடுவதெல்லாம் இந்த ஆட்சி எப்படியாவது தக்க வைத்துக் கொள்வது. மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலைப்படாத நிலையிலே இந்த ஆட்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.




Leave a Reply