BREAKING NEWS

அல்கொய்தாவுக்கு, லஷ்கர்-இ-தொய்பாவுடன் நெருங்கிய தொடர்பு

ஒசாமா பின்லேடன் மரணத்திற்கு பிறகு அல்கொய்தா இயக்கம் அமைதியாக இருப்பது போல் காட்சியளித்தாலும், அது லஷ்கர்இதொய்பா, ஹக்கானி போன்ற இதர தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்கள் அனைத்தும், இஸ்லாமிய அரசு, அல்கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்கள், குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பகுப்பாய்வு ஆதரவு மற்றும் ஒப்புதல்கள் கண்காணிப்பு குழுவானது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 6 மாதத்திற்கும் இந்த குழுவானது தங்களது அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்கும். இந்நிலையில், அந்த குழு தற்போது சமர்ப்பித்துள்ள 24வது அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் அதன் தலைவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அல்கொய்தா இயக்கம் ஆப்கானிஸ்தானை அதன் தலைமைக்கு தொடர்ச்சியான பாதுகாப்பான புகலிடமாக கருதுகிறது.

இது தாலிபானுடன் நீண்டகால மற்றும் வலுவான உறவை கொண்டுள்ளது. மேலும், அல்கொய்தா இயக்கத்தின் தற்போதைய தலைவரான அய்மான் அல்ஜவாரியின் உடல்நலம், இருப்பிடம் மற்றும் அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் அந்த அறிக்கை சந்தேகம் எழுப்பியுள்ளது.

அதுமட்டுமல்லாது, அல்கொய்தா இயக்கமானது தாலிபான் ஆதரவின் கீழ், படாக்ஷான் மாகாணத்தில் குறிப்பாக தஜிகிஸ்தானின் எல்லையில் உள்ள ஷிக்னான் பகுதியில், அதேபோல் பக்திகா மாகாணத்தில் உள்ள பார்மலிலும் தனது இருப்பை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது.

ஐ.எஸ். இயக்கம் சிரியா மற்றும் ஈராக்கில் அதிகாரத்தை இழந்து வரும் நிலையில், பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக ஸ்லீப்பர் செல்களை ஏற்படுத்தி வருகிறது என்று ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானில் தாலிபான்களுடன் நெருக்கமாக செயல்படும் சர்வதேச தீவிரவாத இயக்கங்களால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Leave a Reply