BREAKING NEWS

அருண் ஜெட்லி மறைவு பா.ஜ.க.விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவு, பா.ஜ.க.விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி மறைவு

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதையடுத்து, அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.க. ராஜ்யசபா எம்.பி.யுமான அருண் ஜெட்லி திடீரென மறைவெய்திவிட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

ஜனநாயக தீபத்தை போற்றிப் பாதுகாக்கும் ‘மக்கள் தலைவர்’ ஜெயபிரகாஷ் நாராயணின் போராட்டத்தில் முன்னணியில் நின்று, கைதாகி – நெருக்கடி நிலைமை காலத்தில் ஏறக்குறைய 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்த அருண் ஜெட்லி ஒரு ஜனநாயகவாதி மட்டுமல்ல, நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவர்.

தனித்திறன்

செய்தி, வர்த்தகம், ராணுவம், சட்டம், நிதி உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளின் மத்திய அமைச்சராக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பிறகு மோடி அமைச்சரவையிலும் பணியாற்றி பராட்டுக்களைப் பெற்றவர்.

அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நட்புடன் பழகிய அருண் ஜெட்லி, மாநிலங்களவையின் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றியவர். எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், ஆளுங்கட்சியாக இருந்த நேரங்களில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதிலும் பெரும்பங்காற்றியவர். பாராளுமன்ற விவாதங்களில் தனித்திறமையுடனும், அறிவுக்கூர்மையுடனும் பதிலளிக்கும் ஆற்றல் பெற்றவர்.

பேரிழப்பு

கருணாநிதி மீது பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருந்த அருண் ஜெட்லி, மூத்த வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியவர். நீதிபதிகளின் நன்மதிப்பைப் பெற்றவர். நீதித்துறை சீர்திருத்தங்களுக்காக பாடுபட்டவர்.

பன்முகத்திறமை கொண்ட பண்பாளரும், பாராளுமன்றவாதியுமான அவர், 66 வயதிலேயே மறைவெய்தியது பா.ஜ.க.விற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய அமைச்சரவை சகாக்களுக்கும், பிரதமருக்கும், சக வழக்கறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply