BREAKING NEWS

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை அழைத்து பேசி  காலவரையற்ற போரட்டத்தை தவிர்க்க வேண்டும் – தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை அழைத்துபேசி காலவரையற்ற போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓய்வூதியம்

இதுகுறித்து, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அடுத்தக்கட்டமாக நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக ஆட்சியாளர்கள் ஆண்டுக்கணக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

போராடி வருகிறது

அரசு ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தான் அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராடி வருகிறது.

அரசு முன்வரவேண்டும்

இந்நிலையில், நாளை மறுநாள் முதல் சென்னையில் சங்க நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாநிலையும், மாவட்டத் தலைநகரங்களில் மாலைநேர ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அரசு ஊழியர்களின் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply