BREAKING NEWS

அரசியல் ஞானியும்… அருள் நெறியும்..!

பார் முழுவதும் உண்மையும், அமைதியும், ஒற்றுமையும் ஓங்கி நிற்கவும், பாரதத்தை வாழ்விக்கவும்  தன்னை முழுவதுமாகத் தத்தம் செய்த தியாகச் செம்மல் அண்ணல் காந்தியடிகளின் 150-ம் ஆண்டு விழா அக்டோபர்த் திங்கள் முதல் தொடங்குகிறது.  உலக நாடுகளனைத்தும் போற்றிக் கொண்டாடும் புகழ் வாய்ந்த நல்லாண்டாக இது அமையும். “மனிதரில் தலையாய மனிதர்” என்ற தொடர் காந்தியடிகளுக்குப் பொருத்தமான தொடராகும்.

அண்ணல் காந்தியின் உரைகள், கட்டுரைகள், அறிக்கைகள், தலையங்கங்கள், நேர்காணல்கள், கடிதங்கள் ஆகிய அனைத்து எழுத்து வடிவங்களையும் மடலங்களாகத் தொகுக்கும் பணியைப் பண்டிதர் நேரு உருவாக்கினார்.  ஆங்கிலப் பேராசிரியர் அறிஞர் சாமிநாதன் தலைமையில் நூறு தொகுதிகளை வெளியிட்டு அப்பணி  நிறைவுற்றது.

காந்தி நினைவு அறக்கட்டளையின் சார்பில் முன்னாள் கல்வியமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் காந்தி நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப் பெற்றன.  மறுபதிப்பாக அருட்செல்வர் 1981-ல் இருபது தொகுதிகளாக வெளியிட்டு ஏறத்தாழ இருபத்திரெண்டாயிரம் பக்கங்களில் வெளிவந்தன.

தமிழ்நாட்டில் காந்தி, காந்தி காதை, காந்தி முன்னோடிகள் என்ற மூன்று நூல்களையும் சேர்த்து வெளியிட்டார்.  நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பண்டிதை அசலாம்பிகை அம்மையார் காந்தி புராணம் என்றே புனைந்துள்ளார்.  பாரதத்தில் தமிழகத்திற்குத் தான் அப்புகழ் வாய்த்தது. எனினும் காந்தி பிள்ளைத் தமிழைத் தமிழ்க்கடல் இராய.சொ அவர்கள்  உருக்கமாக எழுதினார். தமிழ் மக்கள் உள்ளத்தில் காந்தியடிகள் சிறப்பான தனியிடம் பெற்றிருப்பதும் காந்தியடிகளும் தமிழகத்தைத் தனியாகப்  போற்றிப் புகழ்ந்தது நமக்குப் பெருமிதமாகும்.

அண்ணல் காந்தியின் அறவாழ்வுக்கு முன்னோடிகளை நினைவு கூர்ந்த வகையில் ஞானப் பரம்பரை என்ற பெயரில் ஐந்து தொகுதிகளாகக் காரைக்கால் அம்மையார் தொடங்கிச் சித்பவானந்தர் வரையில்  அருளாளர்களைப் பற்றிய கட்டுரைகள் அனைத்தும் அருட்செல்வரால் வெளியிடப்பட்டன.  ஞானியர் வாழ்க்கையும் வாக்கும் பிழிந்த சாற்றின் தெளிவாகக் காந்தியம் வடிவானது என்ற அடிப்படைக் கருத்தைக் கொண்டுள்ளது.

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்பதை ஒரு கட்டுரையாகத் தொடங்கி உரைநடைக் காவியமாகவே வழங்கினார் திரு.வி.க. காந்தியடிகளின் எளிய உடையும், சீலமும் நமது மனக்கண் முன் எப்போதும் நிற்கும். வள்ளலாரும், திருநாவுக்கரசரும் காந்தியடிகளுக்கு முன்னோடிகள் என்று நாம் நமக்கு ஏற்ற வகையில் பொருத்தம் கண்டு பெருமை அடையலாம்.  அப்பர் என்றால் தந்தை என்றே பொருள்படும். சம்பந்தர் திருநாவுக்கரசரை அப்பர் என்றே அழைத்தார்.  அண்ணல் காந்தியைத் தேசத்தந்தை என்றுதான் நாம் அழைத்தோம்.

கருணை ததும்பும் கண்களும் கந்தை மிகையாம் என்ற கருத்தும் கையில் உழவாரப் படையும் அப்பரை ஓவியமாக வரைந்து காட்டும். சிந்தையில் சத்தியமும் கந்தை மிகையான காட்சியும் கையில் இராட்டை சுழற்றுவதும், தண்டூன்றிய நிலையில் விரைந்து நடக்கும் தோற்றமுமாகவே பல்லாயிரம் படங்கள் காந்தியடிகளை வரைந்து காட்டும்.

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா மாநகரில் ஐ.நா  அவையை அடுத்த அரியானா பூங்காவில் காந்தியடிகளின்  அமர்ந்த நிலைச் சிலையைச் சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கண்டு மெய்சிலிர்த்து நின்றோம்.  உலக அமைதிக்கு ஒப்பற்ற சிலையாக வேறு எவர் வடிவம் அமையமுடியும்?.  உலக அமைதி, ஒப்புரவு, நல்லெண்ணம், நல்லிணக்கம் முதலிய நற் பண்புகளுக்காக இந்திய அரசு சிலை வடிவத்தைச் சுவிட்சர்லாந்துக்கு வழங்கியது.

உலகில் பல நாடுகளில் காந்தியடிகள் என்றால் இந்தியா  என்றுதான் நினைப்பார்கள்.  அவருடைய சிலைகள் ஆங்காங்கே அமைந்துள்ளன.         ஐ.நா அவையே அக்டோபர்த் திங்கள் இரண்டாம் நாளை தன்னல மறுப்பின்  கொள்கைக்குரிய உன்னத நாளாகப் போற்றி வருகிறது.

அமெரிக்காவில் அண்ணல் காந்தியடிகளின் சிலைகள் ஐந்து இடங்களில் உள்ளன.  உலகின் பிற நாடுகளில் 11 சிலைகள் உள்ளன.

மார்ட்டின் லூதர் கிங் “ஏசுநாதர் எனது ஆன்மிக வழிகாட்டி காந்தியண்ணல் எனது அரசியல் வழிகாட்டி” என்று கூறினார்.  வாழும் காலம் வரை அண்ணல் காட்டிய வழியில் நடந்தார்.  சத்தியம், ஆன்மப் பலம், பிறருக்குத் தீங்கிழைக்காமை, துணிவு ஆகிய நான்கு நல்லியல்புகளின் துணை கொண்டு நிறவெறியை எதிர்த்துப் போராடியது வரலாறு.

காந்தியடிகள் பேச்சாற்றலும், எழுத்துவன்மையும் ஒருங்கே கொண்டிருந்தார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆங்கில மொழி நடைத்திறனை ஆங்கிலேயரும் வியந்து பாராட்டினர். இந்த வகையில் அவரைத்  திருநாவுக்கரசர் என்றே பாராட்டலாம்.

காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கத் தொண்டு தொடங்கிய காலத்திலேயே சத்தியாகிரகம் என்ற கொள்கை  பிறந்துவிட்டது. சத்தியாகிரகம் என்னும் உண்மையை  உறுதியாகத்  தேடும் திண்மை உருவாயிற்று என்று காந்தியடிகளே எழுதினார். தங்கள் போராட்டத்தை அமைதியான எதிர்ப்பு என்றுதான் தொடக்கக் காலத்தில் கூறினார்.

பொருத்தமான ஒரு நல்ல பெயரை இப்போராட்ட முறைக்குக் கண்டுபிடித்துக் கூறும் வாசகருக்கு ஒரு சிறு பரிசு அளிக்கப்படும் என்று இந்தியன் ஒப்பீனியன் இதழில் அறிவித்தார். பலரிடமிருந்து கருத்துகள் வந்தன. இந்தப் போட்டியில் அவர் மகன் மனிலால் காந்தி  கலந்து கொண்டார். காந்தியடிகளின் மகனாராகிய அவர் ‘சத்கிரஹ’ என்ற சொல்லை எழுதியனுப்பினார்.  சத்கிரஹ என்பது ஒரு நல்ல திட்டத்தில் உறுதி என்று பொருள்படும். அச்சொல் காந்தியடிகளுக்குப் பிடித்தது. ஆனால், அவர் எதிர்பார்த்த முழுப்பொருளையும் அது கொண்டதாக இல்லை. அதைச் ‘சத்தியாகிரகம்’ என்று திருத்தியமைத்தார். ஆக்கிரக என்றால் உறுதி. சத்தியாகிரகம் என்றால் உண்மையில் உறுதி என்று பொருள்படும்.

தொடக்கம் முதல் இறுதிவரையில் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தார். அவர் வாழ்வு முழுவதும் சத்தியச் சோதனையாகவே இருந்தது. தன் வரலாற்றுக்கும் சத்தியசோதனை என்று பெயரிட்டார். காந்தியடிகளுக்குச் சத்தியாகிரகமும், உண்ணா நோன்பும் வாழ்க்கையில் மிகச்சிறந்த போர்க்கருவிகள் போல அவ்வப்போது பயன் பட்டு நாட்டுக்கு நலம் விளைந்தன. “பழை யாறை வடதளி” என்னும் இடத்தில், திருநாவுக்கரசரும் சத்தியாகிரகம், உண்ணா நோன்பு என்னும் இருபெருங் கருவிகளையும் புதிதாகப் படைத்துக் கொண்டு போராடி, அவற்றின் துணையால் தம் கருத்தும் விருப்பமும் நிறைவேறச் சிறந்ததொரு வெற்றியினைப் பெற்றார்.

காந்தியடிகள் பிற சமயங்களையும் மதித்துப் போற்றித் தழுவிக் கொண்டார். அவ்வண்ணமே சமயப் பொறுமையைக் கொண்டிருந்தனர். சமயங்கள் தம்முள்ளே உயர்வு தாழ்வு குறித்துப் போரிடுதலை அருளாளர்கள் விரும்பவில்லை.  எச்சமயமானாலும் எம்பிரானுக்கு ஏற்றதாகும்.  காந்தி கண்ட ஈசனுக்கு அல்லா என்ற பெயரும் உண்டு.  வள்ளலாரும் என் கடவுள் பெயர் அருகன் என்பேன், புத்தர் என்பேன் என்ற சமயப் பொதுநெறியைச் சன்மார்க்கமாக வலியுறுத்தினார். கடவுளே உண்மை என்று சொல்வதை விட்டு, உண்மையே கடவுள் என்று சொல்லி வருகின்றேன். என் மதத்தை இன்னும் நன்றாக விளக்குவதற்காகவே இவ்வாறு சொல்லி வருகின்றேன். இப்போது எனக்குக் கடவுளை விளக்க உண்மையைப் போல் வேறு எதுவும் அவ்வளவு பயன்படுவதில்லை. கடவுள் இல்லை என்று கூறப்படுவதை நாம் அறிவோம். ஆனால் உண்மை இல்லை என்று மறுக்கப்படுவதைக் காணோம்.  இதுவே காந்தியடிகள் கண்ட சமரசம் என்ற உண்மை வழிபாடாகும்.

 

காந்தியடிகள் ‘உள்ளொளி’ அல்லது ‘அந்தராத்மாவில்’ துணையைக் கொண்டு அதன்வழி ஒழுகி வந்தார்.  திருமறை ஆசிரியர்கள் ”புந்திவட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய் என்பனோ?” எனவும், நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” எனவும் கூறியிருப்பது உண்மைப் பற்றுறுதியை விளக்கிக்  காட்டும்.

காந்தியடிகளின் வாழ்க்கையில், இந்திய விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில், அஞ்சி நடுங்கிக் கலங்க வேண்டிய நிலைகள் அவருக்கு ஏற்பட்டன. ஆனால், அருளுணர்வும், அஞ்சாமையும் காந்தி அடிகளின் சிறப்பியல்புகளாக இருந்தன. அஞ்சுவதும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை என்ற மன உறுதியோடு நின்றார்.  அவர் எதிர்கொண்ட மரணத் தாக்குதல்கள் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் ஒன்பது.  அனைத்தையும் துணிவோடும் மகிழ்வோடும் எதிர் கொண்டார்.

அரசியலையும் அருளியலையும் ஒன்றாகக் காந்தியடிகள் இணைத்ததைக் கண்டு பாரதியார் “இழிபடு போர், கொலை தண்டம் பின்னியே கிடக்கும் அரசிய லதனிற் மன்னுயிர் போற்றும் மாட்சியைப் பிணித்திடத் துணிந்தனை, பெருமான்!” என முத்தாய்ப்பாகக் கூறி மகாத்மா நீ வாழ்க வாழ்க என்றார்.

உண்மை, தன்னலமறுப்பு, இன்னா செய்யாமை, ஈகம் எனத் தம்மைக் கரைத்துக் கொண்ட கருணைக் கடலைக் காந்தி என்று அழைத்து வருகிறோம்.  அண்ணல் காந்தியடிகளின் நினைவும் கனவும் நிறைவேறுவதற்கு இந்திய அரசும் மாநில அரசுகளும் நல்ல புத்துணர்ச்சியை வழங்க முற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தியக் கருத்துகளும், நெறியும், தொண்டும் உலகெங்கும் பரவ ஊக்கமும் உணர்வும் ஊட்டுமாக.

வாழ்க நீ எம்மான் !

 – ஔவை அருள்,

இயக்குநர்,

மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு அரசு.

கட்டுரையாளர் தொடர்புக்கு: dr.n.arul@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *