தற்போதைய செய்திகள்

`அரசியலில் கருத்து வேறுபாடு உண்டு’ ரஜினியின் ஆன்மிக அரசியலில் நம்பிக்கை இல்லை கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி….

சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்களுக்குள் நிச்சயம் அரசியலில் கருத்து வேறுபாடு உண்டு என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத்தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை நியமித்துள்ளார். மேலும், நடிகர் கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி, அரசியல் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-

நம்பிக்கை இல்லை

அரசியலில் ரஜினிகாந்த் எத்தகைய கொள்கையுடன் இருக்கிறார் என்பது எனக்கு இதுவரை தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை நான் எந்த பக்கமும் சேரப் போவதில்லை. எனக்கு எந்த மதமும் கிடையாது. எல்லா மதங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சினிமாவிலும் எனக்கும் ரஜினிகாந்துக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. அவர் நடித்த படங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. அத்தகைய பட வாய்ப்புகளை நான் ஏற்பது இல்லை. அதுபோல நான் நடித்தது போன்ற படங்களை அவர் ஏற்பது இல்லை. அதே மாதிரியான நிலைப்பாடு தான் அரசியலிலும் எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.

நட்பில் பிளவு

ரஜினிகாந்துடனான என்னுடைய நட்புக்கு அரசியல் ஆப்பு வைத்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் அரசியல் எங்களுக்குள் கருத்து வேறுபாட்டை நிச்சயம் ஏற்படுத்தும். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதற்காக அவரது இமயமலை பயணத்தை நான் கண்டிக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. அரசியலால் எங்களுக்குள் ஏற்படும் பிளவை நினைக்கும்போது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது.

அரசியலில் நானும் ரஜினிகாந்்தும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா? என்று பலரும் கேட்கிறார்கள். சில கொள்கைகளை அவர் விட்டுக் கொடுக்கலாம். சில கொள்கைகளில் அவர் உறுதியாக இருக்கலாம். அது எங்கள் இருவருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில் எங்களிடையே பிளவு ஏற்படும்.

விமர்சிக்க விரும்பவில்லை

அது எங்களுக்கே தெரியாது. தேர்தல் இன்னும் வரவில்லை. வந்த பிறகு அது பற்றி பார்த்துக் கொள்ளலாம். திரை உலகில் நானும் ரஜினிகாந்தும் போட்டியாளர்களாகத் திகழ்ந்தோம். என்றாலும் எங்களுக்குள் நல்ல நட்பு நிலவியது. ஆனால், அரசியலில் அதை எதிர்ப்பார்க்க முடியாது.

அரசியலில் விமர்சனம் செய்யும்போது, அது எங்களை முழுமையாக பிளவுபடுத்தி விடும். அது தவிர்க்க முடியாதது. ரஜினிகாந்தின் அரசியல் பற்றி என்னால் இப்போது எந்த கருத்தும் சொல்ல இயலாது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அரசியலில் நாகரீகமான போக்கை கடைபிடிக்க விரும்புகிறோம்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Leave a Reply