BREAKING NEWS

அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட பொலிவியா அதிபர் ஏவோமொரேல்ஸ்

அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அதிபர் ஒருவர் களமிறங்கி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்காவில் பிரேசில் உட்பட 9 நாடுகளில் பரவியுள்ள அமேசான் காடு உலகின் நுரையீரலாக வர்ணிக்கப்படும் நிலையில், தற்போது அங்கு ஏற்பட்டுள்ள காட்டு தீ உலகிற்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து தங்களது நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் பிரேசில் ஈடுபட்டு வருகிறது.

அதன் அண்டை நாடான பொலிவியாவும் தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் அந்நாட்டு அதிபரே களத்தில் இறங்கி காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது உலகின் கவனத்தை ஈர்பதாக இருந்தது.

தீயை அணைக்கும் பணியில் 800 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த பொலிவியா அதிபர் ஏவோமொரேல்ஸ், மேலும் 100 குழுக்கள் விரைவில் வரவுள்ளதாக தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் மட்டுமின்றி தன்னார்வலர்களையும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட ஏவோமொரேல்ஸ், குறுகிய காலப் பயிற்சி எடுத்தே இவர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றார்.

இதை தொடர்ந்து பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிற்கு தீயின் பாதிப்பு உள்ளதாக பொலிவியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிபர் ஏவோமொரேல்ஸ் களத்தில் இறங்கி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது இந்த பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Leave a Reply