BREAKING NEWS

அமெரிக்காவுடன் நம்பகத்தன்மையுடன் கூடிய உறவை விரும்புகிறேன் –  இம்ரான் கான்-அமெரிக்க தூதர் சந்திப்பு.


 

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ள இம்ரான் கான் அமெரிக்காவுடன் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் கூடிய உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதிரடி உத்தரவு

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதன்படி, ஈரான், ஈராக், சிரியா உள்பட 7 இஸ்லாமிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் குடியேற தடைவிதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

உறவில் விரிசல்

இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் அரசு மறைமுகமாக உதவி செய்துவருவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்த போதிலும் அந்நாட்டிற்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவிகளை ரத்து செய்வதாக அவர் அறிவித்தார். இதனால், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

விரைவில் பதவியேற்பு

பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற பொதுதேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சி அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத போதிலும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்ச்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானின் பிரதமராக விரைவில் இம்ரான் கான் பதவியேற்கவுள்ளார்.

பரஸ்பர உறவு

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டுக்கான அமெரிக்க தூதர் ஜான் எப்.ஹூவரை இம்ரான் கான் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான உறவில் இருந்த ஏற்ற இறக்கங்கள் காரணமாக அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியுதவியை தடை செய்துவிட்டது.

இருப்பினும், அமெரிக்காவுடன் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் கூடிய உறவை எங்கள் கட்சி விரும்புகிறது. எனவே, அமெரிக்காவுடன் இன்னும் நிலையான மற்றும் நம்பகத்தன்மையுடன் கூடிய உறவை ஏற்படுத்திடும் முயற்சிகளில் பாகிஸ்தான் அரசு ஈடுபட உள்ளதாக அமெரிக்க தூதரிடம் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.




Leave a Reply