தற்போதைய செய்திகள்

அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்றே கூட்ட வேண்டும்

 

அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்றே கூட்ட வேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க.
சென்னை.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய வாதம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தை 15-ந்தேதி (இன்று) கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி வழக்கு

உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கின் இறுதித்தீர்ப்பு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று மத்திய அரசு காவிரி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் நாளை தமிழக அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் வஞ்சகம்

அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் லாபத்திற்காகவும் தமிழக மக்களை வஞ்சித்த மத்திய அரசு, கர்நாடக தேர்தல் முடிவடைந்த நிலையில், காவிரி நீர் உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்திருக்கிறது.

நீதிமன்றத்தின் கண்டனங்களிலிருந்து தப்பிக்கும் வகையில், தனது வரைவுத் திட்ட விவரங்களை சமர்ப்பித்திருக்கும் மத்திய அரசு, அதனை முழுமையாக எப்போது நடைமுறைப்படுத்த போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அழுத்தமான வாதம்

தமிழ்நாட்டு மக்களும், டெல்டா விவசாயிகளும் எதிர்பார்ப்பது முழுமையான அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், மத்திய அரசு வாரியத்திற்குப் பதிலாக ஆணையம், குழு என்ற மாற்றுவழிகள் கொண்ட பெயர்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றாக எந்த அமைப்பையும் ஏற்க இயலாது என வலியுறுத்த வேண்டிய கடமை அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. மே 16-ந் தேதி நடைபெறும் விசாரணையில் தனது வாதங்களை அழுத்தமாக எடுத்து வைத்திட வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டம்

காவரி மேலாண்மை வாரியத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற டெல்டா விவசாயிகள், மத்திய அரசின் வரைவுத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தமிழக நலனை மனதில் கொண்டு, இனியும் கால அவகாசம் வழங்காமல், முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க ஆவன செய்யவேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின் அம்சங்களை செயல்படுத்துவதற்கு, தி.மு.க. தொடர்ந்து செயல்படும். காவிரி விவகாரத்தில் எவ்வித அரசியலுக்கும் இடம்தராமல், தமிழ்நாட்டின் நலன் ஒன்றையே கருத்திற்கொண்டு மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், அதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தவும், மே 15 (இன்று) தமிழகத்தின் அனைத்து கட்சிகள் – அனைத்து விவசாய அமைப்புகளின் கூட்டத்தை அ.தி.முக.. அரசு கூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply