BREAKING NEWS

அதிக அபராதம் மட்டுமே விபத்துகளைக் குறைக்குமா?

ஓவியத்தைப் போலவே கவனமாகக் கையாள வேண்டிய விடயம் வாகனம் ஓட்டுவது. ஏதேனும் ஒரு புள்ளியில் சிதறும் கவனத்தால் ஓவியம் முழுக்க பாழ்படுத்துவது போலத்தான் வாகன விபத்துகளும் நடந்து கொண்டிருக்கின்றன. உலகளவில் ஒப்பிட்டு பார்க்கும் போது ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் அதிகளவில் விபத்துகளால் உயிரிழப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு விபத்தும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு இழப்புகளைத் தருகின்றன. இதனைத் தடுக்க மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா 2019, 63 திருத்தங்களோடு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதே சட்டம் 1980களில் நடைமுறைக்கு வரும் போது இருந்த அபராதத்தொகையின் 10 மடங்குதான் தற்போதைய அபராதத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறும் போது புதிய சட்டத் திருத்தங்கள் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும். ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேர் நாட்டில் உயிரிழக்கிறார்கள். புதிய சட்டத் திருத்தங்கள் பொதுமக்கள் சாலைவிதிகளை மீறுவதைத் தடுக்கும், எனத் தெரிவிக்கிறார். ஒட்டுமொத்தமாக விபத்துகளைக் குறைக்க இந்த முறை சரியானது போலத் தோன்றலாம். அது உண்மையும் கூட. இது ஒரு கடுமையான சட்டத்திருத்தம். இருந்தாலும், அதிகளவு அபராதம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்த சட்டத்தை சில காவல்துறையினர் லஞ்சம் வாங்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், நடுத்தர வர்க்கம் அல்லது அதற்கும் குறைவான வருமானம் கொண்டோர் இந்த சட்டத்தை எப்படிச் சமாளிப்பார்கள் எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்தச் சட்டத்திருத்தத்தால் அபராதத்திற்குப் பயந்து சாலை விதிகளை மக்கள் பரவலாகப் பின்பற்றுவார்கள். ஆனால், விபத்துகளுக்குப் பொதுமக்கள் மட்டும்தான் காரணம் என வரையறுக்க முடியாது. சாலைகளும், அரசின் அலட்சியமும் கூட காரணம். ஒவ்வொரு விபத்தின் போதும் ஓட்டுநர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட சாலையினுடைய ஒப்பந்ததாரரைக் குறித்து எந்த கேள்விகளும் எழுப்புவதில்லை. உதாரணமாக, ஒரு பாலம் தொடர்பான வேலை நடக்கிறது எனக் கொள்வோம். அதனைச் சுற்றியுள்ள சாலைகள் அடிக்கடி வரும் கனரக வாகனங்களால் பழுதடையக் கூடும். மேடு, பள்ளங்கள் உருவாதற்கான வாய்ப்புகள் அதிகம். அச்சமயம் மழை உண்டானால் பள்ளங்கள் நீரால் நிரம்பும். வாகனங்கள் விபத்துக்குள்ளாகும். இதற்கு யார் பொறுப்பாவார்கள். இதில் வாகன ஓட்டி எந்த விதியை மீறினார். எனவேதான், விதிகளை மீறும் நடுத்தர வர்க்கம் மட்டும் விபத்திற்கு காரணமில்லை. தரமில்லாத சாலைகளும், அதனைக் கண்டு கொள்ளாத அரசின் அலட்சியமும் கூடத்தான். பாதுகாப்பில்லாத சாலைகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
அதிர்ச்சி அளிக்கும் அபராதத் தொகைக்கணக்குகள்…
புதிய அபராதக் கொள்கையின் படி விதிகளை மீறுபவருக்கான பொது அபராதம் ரூ.100லிருந்து ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தலைக்கவசமில்லாமல் வாகனம் இயக்கினால் முன்பு ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அத்தொகை ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் செயலிழக்கப்படும். இதைப் போலவே, இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் பயணிகள் பயணித்தால், ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு செய்யப்படும் மற்றும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன்னதாக, ரூ.100 மட்டுமே அபராதம். அங்கீகாரமின்றி உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதலுக்கு அபராதம் ரூ1000லிருந்து ரூ.5000ஆக மாற்றப்பட்டுள்ளது. பிணியூர்தி (ஆம்புலன்ஸ்) மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் இதுவரை ரூ.1000 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.2000ஆக உயர்ந்துள்ளது.
18 வயதை அடையாத சிறார்கள் புரியும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அவர்களின் காப்பாளர் அல்லது வாகன உரிமையாளர் குற்றவாளியாகக் கருதப்படுவர். அவர்களிடம் ரூ.25,000 வரை அபராதம் வசூலிக்கப்படுவதுடன் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்தக் குற்றத்தின் அடிப்படையில் வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும். சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டு ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க முன்னதாக விதிக்கப்பட்டிருந்த அபராதம் ரூ.500லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் இயக்கினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம்.
தகுந்த ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு முன்னதாக ரூ.500 அபராதத் தொகையாக இருந்த நிலையில், தற்போது ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. தகுதி இழப்பு செய்யப்பட்ட பின்னரும் வாகனங்களைத் தொடர்ந்து இயக்குபவர்களுக்கான அபராதமும் ரூ.5,00லிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. சீட் பெல்ட் அணியாமல் வாகனம் இயக்குபவர்கள், அதிவேகமாக இயக்குபவர்கள், ஆபத்தான வகையில் வாகனத்தைச் செலுத்துபவர்கள் என அனைத்து விதிமீறலுக்கும் அபராதத் தொகை அதிகரித்துள்ளது. மேலும், வாகனங்களில் அதிக அளவில் சுமை ஏற்றி வருவோருக்கு ரூ.20,000 மற்றும் கூடுதலான ஒவ்வொரு டன் எடைக்கும் ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்படும். முன்னதாக இந்தத் தொகை ரூ.2,000 மற்றும் கூடுதல் ஒவ்வொரு டன் எடைக்கும் ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பயணிகளை ஏற்றினால் ஒவ்வொரு கூடுதல் பயணிக்கும் தலா ரூ.1,000 வீதம் அபராதம் வசூலிக்கப்படும். இதற்கிடையில், போக்குவரத்து அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்டால் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகை இருமடங்காக வசூலிக்கப்படும் என்றும், போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அபராதம் மட்டும்தான் தீர்வா?
உயிருக்கு தீங்கு விளைவிக்கும் எல்லா விதிமீறல்களும் கண்டிக்கதக்கவைதான். அதற்காக அபராதம் மட்டும் தீர்வல்ல. இந்தத் தொகை எல்லாருக்குமான தண்டனையாக பொதுவில் வைக்கப்படும் போது சாமானியர்களுக்கு மற்றுமொரு சவுக்கடியாகத்தான் இருக்கும். எனவே, முதலில் தலைக்கவசம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடத்தலாம். அதை மீறுபவர்களுக்கு அபராதத் தொகைக்கு ஈடாகத் தலைக்கவசத்தை அளிக்கலாம். வேகத்தின் அளவை பரிசோதிக்க வேண்டும். அதிவேகம்தான் விபத்துக்களைத் தோற்றுவிக்கிறது. எனவே, அதைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வேகக்கட்டுபாடு அவசியம். தற்கால இளைஞரிடத்தில் வேகமாக செல்வதே கதாநாயகத்தனமாக பேசப்படுகிறது. அதனால், பெரும்பாலும் இளைஞர்கள் என்ஜின் செயல்திறன் அளவு (cubic capacity) அதிகமாக இருக்கும் வாகனங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். உதாரணமாக, இளைஞர்கள் இருசக்கர வாகனங்களின் சி.சி 220 இருக்கும். ஆனால், பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டி 110 சி.சியிலே கிடைக்கும். இந்த வேறுபாடு ஹீரோயிசங்களில்தான் விடிகிறது. இதனைக் கண்காணிக்க வேண்டும். அதிக வேகமாக ஓட்டுபவர்கள் வண்டியில் வேகக்கட்டுபாடு கருவி பொருத்த வேண்டும்.
குறிப்பாக, தண்டவாளங்களைப் பாதுகாக்கும் அரசு சாலைகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறது. மழைக்காலங்களில் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் சாலைகளையும் கவனிக்க வேண்டும். அதன் காரணமாக ஏற்படும் விபத்துகளுக்கு நெடுஞ்சாலைத்துறை பொறுப்பேற்க வேண்டும். தேவைக்கதிகமான வேகத்தடைகள், சாலையில் உண்டாகும் பள்ளங்கள், தேவையற்ற பாரிகாட், தேவையுள்ள இடங்களில் வைக்க வேண்டிய வேகத்தடைகள் இதனைக் கண்காணிக்க சாலைப்பாதுகாப்பு தனிக்குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு சிக்னல்களிலும் இயக்கத்திலிருக்கும் சிசிடிவி கேமராவின் மூலம் விதியை மீறும் வாகனங்களைக் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அடுத்தடுத்த இடைவெளியில் தள்ளி நிற்கும் வாகனங்களுக்குத் தெளிவாகத் தெரியுமளவு சிக்னல்கள் உயரமாக இருக்க வேண்டும். விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளத்தான் தலைக்கவசமே தவிர விபத்தே நடக்காமல் பார்த்துக் கொள்ள அல்ல. எனவே, தலைக்கவசத்திலே முழுகவனம் செலுத்தாமல் பிற காரணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விபத்தை அதிகளவில் ஏற்படுத்தக்கூடிய அதிவேகமான வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் செல்லும் வாகனங்கள், சிக்னலை மதிக்காமல் கடக்கும் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யலாம். எல்லாரும் விதிமுறைகளைக் கடைபிடிக்கும் போது விபத்துகள் குறைய வாய்ப்பு அதிகம். மேலும், விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து பொருளாதார அடிப்படையில் மட்டும் நெருக்கடி தருவதில் கவனம் செலுத்தாமல் சமூக சேவைகளிலும் ஈடுபடுத்தலாம்.
இப்படியாக, அரசு தன் சார்பாகவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மொத்த விபத்துக்கும் காரணம் வாகனத்தினை இயக்குபவர்கள் என அரசு அலட்சியம் காட்டுவதை நிறுத்திவிட்டு ஆணிவேரிலிருந்து பிரச்சினையைப் பார்க்க வேண்டும். மேலும், எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் விபத்துகளைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– மரிய பனி மோனிஷா,                                                                                                                                                                      ஊடகவியலாளர்
Leave a Reply