BREAKING NEWS

அண்ணா பல்கலை. போதிய நிதி ஒதுக்க வேண்டும் மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் உயர்புகழ் கல்விநிறுவன அந்தஸ்துக்காக

உயர்புகழ் கல்வி நிறுவன அந்தஸ்துக்காக அண்ணா பல்கலைகழகத்திற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயர்புகழ் நிறுவனம்

10 அரசு கல்வி நிறுவனங்கள், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் என மொத்தம் 20 பல்கலைக்கழகங்களை உயர்புகழ் கல்வி நிறுவனங்களாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது. அரசு கல்வி நிறுவனங்களில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம், மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் மட்டும் தான் மாநிலப் பல்கலைக்கழகங்கள். இதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதிகபட்சமாக ரூ.3,000 கோடி வரை செலவிட வேண்டியிருக்கும்.

அண்ணா பல்கலை

அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த ரூ.2750 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருப்பதால், மத்திய அரசு வழங்கும் ரூ.1000 கோடி தவிர மீதமுள்ள ரூ.1750 கோடியை 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலை திரட்ட வேண்டும். இது சாத்தியமல்ல. அதேநேரத்தில் ரூ.1750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் செலவிடுவதற்கான உத்தரவாதத்தை தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் அளிக்காவிட்டால் இந்த தகுதி மராட்டியத்திலுள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம் அல்லது அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றி வழங்கப்படும் என்று மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. மத்திய அரசின் இந்த செயல் சமூக அநீதி. சென்னை ஐ.ஐ.டிக்கு முழு நிதியை வழங்கவுள்ள மத்திய அரசு, மறுபுறம் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு நிதியை வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?

நிதி வேண்டும்

உயர்புகழ் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதன் நோக்கமே உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்களை இடம்பெறச் செய்வது தான். இந்த நோக்கம் நிறைவேறினால் அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தான் பெருமை சேர்க்குமே தவிர, மாநிலங்களுக்கு தனித்த பெருமை சேர்க்காது. எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் கல்வி நிறுவனமாக மாற்றுவதற்கு முழு நிதியையும் மத்திய அரசே வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *