BREAKING NEWS

அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து இம்ரான்கானுக்கும் ராணுவத்திற்கும் இடையே முரண்பாடு

அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும் ராணுவத்திற்கும் இடையே முரண்பாடு வெடித்துள்ளது.

பாகிஸ்தான் ஒருபோதும் முதலில் அணுஆயுதங்களை பயன்படுத்தாது என்று இரண்டு நாட்களுக்கு முன்பு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியிருந்தார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என பாகிஸ்தானிடம் கொள்கை முடிவு ஏதும் இல்லை என்றார்.

முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது இல்லை என்ற இந்தியாவின் கொள்கை மறுபரிசீலனைக்கு உட்பட்டது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தியா தனது கொள்கையை மாற்ற விரும்பினால் அது அந்நாட்டின் விருப்பம் என்றும், ஆனால் முதலில் பயன்படுத்தினால் இரண்டாவதாக பதிலடியும் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அணுஆயுதங்களை பயன்படுத்துவது என்பது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சனை என்றும், அது குறித்து பேரணிகளிலோ பத்திரிக்கையாளர் சந்திப்புகளிலோ விவாதிப்பது உகந்தது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இரு அணுஆயு நாடுகளும் அணுஆயுதப் போர் நடத்துவதற்கு இடமேயில்லை என்றும் ஆசிப் கபூர் கூறினார். அணுஆயுதங்கள் தாக்குதலுக்கானவை அல்ல, அச்சுறுத்தலுக்கானவை மட்டுமே என்றும், அவற்றை பயன்படுத்துவது அரசியல் தலைமையின் விருப்பம் என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.




Leave a Reply