தற்போதைய செய்திகள்
download

அடுத்த 24 மணிநேரத்தில்,தென்கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….

சென்னை, ஜன. 12-
வங்கக் கடலில் வடகிழக்கு திசையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசுவதால், அடுத்த 24 மணிநேரத்தில் தென்கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொள்ளிடத்தில் 10 செ.மீ.,
சில நாட்களுக்கு முன் மன்னார் வளைகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் நாகப்பட்டினம், கடலுார், பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதிகபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
கனமழை
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில் ‘வங்கக் கடலில் வடகிழக்கு திசையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசும். இதன் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலியில் கனமழை பெய்யும். சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மழை விவரம்
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தில் 10 செ.மீ., சீர்காழி, கே.எம்.ே காவிலில் தலா 7 செ.மீ., கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் 6, மயிலாடுதுறை, சேத்தியாதோப்பில் தலா 5 செ.மீ., ஜெயம்கொண்டம், பாபநாசத்தில் தலா 4 செ.மீ., தொழுதுார், திருவாரூர், முஷ்ணம், சேந்துரை, வெண்பாவூர், வேதாரண்யத்தில் தலா 2 செ.மீ., பெரம்பலுார், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, சத்திரபட்டி, தஞ்சாவூர், தம்மம்பட்டி, விருதாச்சலம், ஆடுதுறை, வலங்கைமானில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
Leave a Reply