தற்போதைய செய்திகள்

அக்கா கணவரை திருமணம் செய்வதற்காக அக்காவை கொலை செய்த இளம்பெண் கள்ளக்காதலனுடன் கைது…..

திருப்பூர்,
அக்கா கணவரை திருமணம் செய்வதற்காக, அக்காவை கொலை செய்த இளம்பெண் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
நதியா
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 28). இவருடைய மனைவி நதியா (வயது 24), மகள் தக்‌ஷிதா (4), மகன் சுதர்சன் (2). பூபாலன் 10 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தில் சொந்தமாக வீடுகட்டி குடியிருந்து வருகிறார்.
பனியன் நிறுவனங்களில் ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்துவருகிறார். பூபாலனுடன் அவருடைய தம்பிகள் மணிபாலன், ஜீவானந்தம் ஆகியோரும் தங்கியிருந்து வேலை செய்துவந்தனர். அதே பகுதியில் நதியாவின் சித்தி மகள் ரேகாவும் (22) குடியிருந்து வருகிறார்.
கொடூர கொலை
இவர் தனது அக்கா நதியாவின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 14-ந்தேதி காலை பூபாலன் மற்றும் அவருடைய தம்பிகள் வேலைக்கு சென்றுவிட்டனர். நதியா மட்டும் 2 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். அன்று இரவு மணிபாலன் முதலில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது சுதர்சன் வாசலில் அழுது கொண்டிருந்தான். வீட்டுக்குள் நதியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். குழந்தை தக்‌ஷிதாவையும் காணவில்லை.
ேபாலீஸ் விசாரணை
இதுகுறித்து அவர் தனது அண்ணன் பூபாலனுக்கும், வீரபாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நதியா அணிந்து இருந்த 5 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
மோப்ப நாய் கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. போலீசார் நதியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், நதியா கொலை செய்யப்படுவதற்கு முன்அந்த வீட்டுக்கு அவரது தங்கை ரேகா வந்ததாகவும், அவர் தான் தக்‌ஷிதாவை எடுத்துச்சென்றதாகவும் தெரியவந்தது.
கள்ளக்காதலனுடன் பெண் கைது
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சகோதரி நதியாவை, தனது கள்ளக்காதலன் நாகராஜ் மூலம் கொலை செய்ததாக ரேகா ஒப்புக்கொண்டார்.
ரேகாவையும், நாகராஜையும் (25) போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
போலீசாரிடம் ரேகா கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம். எனது கணவர் கஜேந்திரன். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனக்கும் செங்கத்தை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இது எனது கணவருக்கு தெரிந்துவிட்டதால் அவர் பிரிந்து சென்றுவிட்டார்.
விவகாரத்து வழக்கும் நடந்து வருகிறது. நான் குழந்தைகளை அழைத்துக்கொண்டு 2 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் இடுவம்பாளையம் வந்து வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். நாகராஜும் என்னுடன் வந்து தங்கியிருந்து ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நதியாவின் கணவர் பூபாலன் சொந்த வீடு, வசதியுடன் இருப்பது தெரிந்ததால், அவருடனான நட்பை நெருக்கமாக்கிக் கொண்டேன். அப்போது, என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று அவரிடம் கூறியதற்கு, விவகாரத்து வழக்கு முடிந்தவுடன் திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார்.
கொலை திட்டம்
நதியா உயிரோடு இருந்தால் பூபாலனுடன் நெருக்கமாக இருக்கமுடியாது, நதியாவை தீர்த்துக்கட்டினால் தான் அவர் முழுமையாக கிடைப்பார் என்று நினைத்தேன். எனவே, நதியாவை கொலை செய்ய திட்டமிட்டு நாகராஜிடம் தெரிவித்தேன். அவரும் இதற்கு சம்மதித்தார்.
கடந்த 14-ந்தேதி இரவு 7 மணிக்கு நாகராஜும், நானும் நதியா வீட்டுக்கு சென்றோம். சற்று தொலைவில் நாகராஜை நிற்கச்சொல்லிவிட்டு நான் மட்டும் நதியா வீட்டுக்கு சென்றேன். அங்கு குழந்தைகளுடன் இருந்த நதியாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, தக்‌ஷிதாவை அழைத்துச் செல்வதாக கூறி எடுத்துச்சென்றேன். தக்‌ஷிதாவுடன் வெளியே வந்ததும், நாகராஜிடம் சைகை மூலம் காரியத்தை முடித்துவிடும்படி கூறினேன்.
நதியாவின் செல்போனையும் எடுத்துக்கொண்டேன். நாகராஜ் அங்கு சென்று நதியாவின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகையை எடுத்துக்கொண்டு பெங்களூரு சென்றுவிட்டார். அந்த நகையை ஒரு கடையில் நாகராஜ் அடகுவைக்க முயன்றபோது அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு வாக்கு மூலத்தில் ரேகா தெரிவித்துள்ளார்.
நாகராஜிடம் இருந்து 5 பவுன் நகை, செல்போன், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கொலை செய்தபோது அணிந்து இருந்த சட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Leave a Reply