தற்போதைய செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு அதிகாரபூர்வ அறிவிப்பு, டிசம்பர் 5-ந்தேதி வெளியாகும்…

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர் தலைவராக தேர்வானது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, டிசம்பர் 5-ந்தேதி வெளியிடப்படும்

19 ஆண்டுகள் நீடித்த சோனியா

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார்.

70 வயது நிறைந்த அவர் கடந்த 1998-ம் ஆண்டு மார்ச் 14-ல் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்றார். தலைவராக அவர் 19 ஆண்டுகள் நீடித்துள்ளார்.

இந்த நிலையில், சோனியா காந்தி தற்போது உடல் நலம் குன்றிய நிலையில் இருந்து வருகிறார்.

ராகுலை தலைவராக்க

அதைத் தொடர்ந்து கட்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் ராகுல் காந்தியை தலைவராக்க மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர்.

ராகுல் காந்தி கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி முதல் துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். 4 ஆண்டுகளுக்கும் மேல் பதவியில் நீடித்து வரும் அவர் தலைவராவதற்கு கட்சியின் செயற்குழுவில் முறையான ஒப்புதல் பெற வேண்டும்.

ஒருமனதாக தீர்மானம்

அதன்படிடெல்லியில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு நேற்று கூடியது. கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்ய ஒருமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் காங்கிரசின் புதிய தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, கட்சியின் தலைவர் தேர்தலுக்கான நடைமுறைப் பணிகளுக்கு கூட்டத்தில் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டது.

தேர்தல் அட்டவணை

அதன்படி, தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை டிசம்பர் 1-ந்தேதி வெளியிடப்படும். மனுக்கள் பரிசீலனை நடைமுறைகள் டிசம்பர் 5-ந்தேதிக்குள் நிறைவடையும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள், டிசம்பர் 11-ந்தேதி ஆகும். தேர்தலில் போட்டி இருந்தால், டிசம்பர் 16-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 19-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும்.

செயற்குழு கூட்டத்திற்குப்பின் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா மேற்கண்ட தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.
அதிகாரபூர்வ அறிவிப்பு

நேற்றைய செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதால், தலைவர் தேர்தலில் ராகுலை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யப்போவது இல்லை.

எனவே வேட்பு மனுதாக்கல் மற்றும் பரிசீலனை டிசம்பர் 5-ந்தேதிக்கள் நிறைவடைந்து, யாரும் போட்டியிடாததால், ராகுல் தலைவராக தேர்ந்து எடுத்தது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அன்றே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மன்மோகன்சிங்

நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற குழு தலைவராக
சோனியா நீடிப்பார்

ராகுல் காந்தி கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றபின், கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரந்தீப் சுர்ஜிவாலா, ‘‘சோனியா காந்தி எங்கள் தலைவர்; வழிகாட்டி. அவர் எப்போதும் காங்கிரசை வழிநடத்தி வருகிறார். அவருடைய தலைமைப்பண்பும் வழிகாட்டுதலும் தொடர்ந்து கட்சிக்கு கிடைக்கும்’’ எஎன்று கூறினார்.

குஜராத் தேர்தலுக்கு முன்பே
தலைவர் ஆகும் ராகுல் காந்தி

கடந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின்போது ராகுல் காந்தியை தலைவர் பதவியை ஏற்கும்படி பணிக்கப்பட்டது. ஆனால், முறைப்படிதான் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பதில் ராகுல் உறுதியாக இருந்தார்.

எனவே குஜராத் தேர்தலுக்கு முன்பாகவே, டிசம்பர் 5-ந்தேதி அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார். இதன் மூலம் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிவாகை சூட வழிவகுக்கும் என கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
Leave a Reply